காரைக்குடி சாம்பசிவ ஐயர்


பிறப்பு: 1888
இறப்பு: ஆகஸ்ட் 5, 1958
காரைக்குடி சாம்பசிவ ஐயர் (Karaikudi Sambasiva Iyer) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீணை வித்துவான். ஆரம்பத்தில் இவரும் இவரது மூத்த சகோதரர் காரைக்குடி சுப்பாராம ஐயரும் (Karaikudi Subbarama Iyer) சேர்ந்து காரைக்குடி சகோதரர்கள் (Karaikudi Brothers) என்ற பெயருடன் வீணைக் கச்சேரிகள் செய்து வந்தனர். 1938 ஆம் ஆண்டு சுப்பாராம ஐயர் இறந்த பின்னர், சிறிது காலம் பொது நிகழ்ச்சிகளில் பங்குபற்றாமல் இருந்த சாம்பசிவ ஐயர், சிலரின் தூண்டுதலால் தனியாக இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றத் தொடங்கினார். இவர் தேசிய விருது பெற்ற முதலாவது வீணை வாத்தியக் கலைஞர் ஆவார்.1

குடும்பம்

சாம்பசிவ ஐயர் புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் என்ற ஊரில் வீணை வித்துவான் சுப்பையா ஐயருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். முதலாவது மகன் சுப்பாராம ஐயர். இடையீடின்றி தொடர்ந்து ஏழு தலைமுறைகளாக வீணை வித்துவான்களாக விளங்கிய இவர்கள் எட்டாவது தலைமுறையினர்.2

குணாதிசயம்

சாம்பசிவ ஐயர் மிகவும் ஆச்சாரமான பிராமணர். எளிமையும், வணக்கத்துக்குரியதுமான தோற்றம் கொண்டவர். 1952 ஆம் ஆண்டு இவருக்கு குடியரசுத் தலைவர் விருது கிடைத்தபோது அதனைப் பெற புதுடில்லி செல்ல மறுத்துவிட்டார். நீண்ட நேரம் பயணம் செய்ய நேருமென்பதால் தனது பூஜை நியமங்கள் தடைப்பட்டுவிடும் என அவர் கூறினார். பின்னர் செம்மங்குடி சீனிவாச ஐயர், ஸ்ரீ ஜி. என். பாலசுப்பிரமணியம், ஸ்ரீ ஜி. டி. சாஸ்திரி போன்ற வித்துவான்கள் வற்புறுத்தி இவரை டில்லிக்கு அனுப்பி வைத்தனர். பயணத்தின் போது இடையில் தங்கி தனது பூஜைகளை செய்தார். தன் வாழ்நாள் முழுவதும் பூஜை நியமங்களை செய்து வந்தார்.3

ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவரின் சந்நிதானத்தில் வீணை நாதோபாசனை செய்வார். மிருகங்கள் உட்பட அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டவர். மிருகங்கள் கொல்லப்படுவதை அவர் எதிர்த்தார். பாம்பு வீட்டிற்குள் வந்தால் கூட அதனைக் கொல்லாமல் எடுத்துச் சென்று எங்காவது விட்டுவிடும்படி சொல்லுவார். 4

அவர் தனது வீணையை தானே எடுத்துச் செல்வார். ஏழு தலைமுறையாக வந்த அந்த வாத்தியம் அவருக்கு இறைவனுக்குச் சமம். "புகழையோ பணத்தையோ சம்பாதிப்பது இலகுவாக இருக்கலாம், ஆனால் தந்து ஆத்மாவைத் திருப்திப்படுத்துவது மிகவும் கஷ்டம்" என அவர் கூறுவார்.5

இசை வாழ்வு

தனது தந்தையிடம் வீணை கற்றுக்கொண்ட சாம்பசிவ ஐயர், குடும்பப் பாரம்பரியத்தைப் பேணி இசையின் தூய்மையைக் காத்து வந்தார்.

அவர் தனது வீணை இசை ஒலிப்பதிவு செய்யப்படுவதை விரும்பவில்லை. தற்போது கிடைக்கும் ஒலிப்பதிவுகள் பெரும்பாலும் அவர் வானொலியில் கச்சேரிகள் நிகழ்த்தியபோது நண்பர்களால் பதிவு செய்யப்பட்டவையே. குடியரசுத் தலைவர் விருது பெற்றபோது மட்டும் புதுதில்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் இவரது இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

1952 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திரப் பிரசாத் அவர்களிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொண்டார். அப்போது விருது ஒரு பாராட்டுப் பத்திரமும் ஆயிரம் ரூபா பணமுடிப்பும் கொண்டதாக இருந்தது.6

குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றபின் இவர் ஸ்ரீமதி ருக்மிணி அருண்டேல் அழைப்பின்பேரில் சென்னை கலாக்ஷேத்ராவில் ஒரு ஆசிரியராக சேர்ந்து அந்த வளாகத்திலேயே ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார்.

1940 களில் "கல்கி" எழுதிய விமரிசனம் இவரின் சிறப்பை எடுத்துக்கூறும்.

"தற்காலம் வீணை வாத்யப் பெருமையும், அழகும், பழம் பெரும் சீனியர் வித்துவான் காரைக்குடி சாம்பசிவ ஐயர் கையில்தான் உச்சத்தை அடைந்திருக்கின்றன என்பது 26 ஆம் தேதி திருச்சியில் நடந்த அவர் கச்சேரியிலிருந்து தெரிய வந்திருக்கும். ராகங்களையும், கிருதிகளையும், வெகு நிதானமாயும், அழுத்தமாயும், ஸ்படிகம் போன்ற தெளிவு கோவை சஞ்சாரங்கள் சங்கதிகளுடன், தொட்டவிடமெல்லாம் கமகம் பொழிய, வனப்பு வடிவங்களாய்ச் சித்திருப்பதில் அவருக்கு நிகரில்லையெனலாம். அன்று எடுத்துக்கொண்ட ஆறு ராகங்களில், காம்போதி, பைரவி, சாரங்கா மூன்றிற்கும் ஆலாபனைகளுடன் மனோகரமாய்த் தானமும் வாசித்தார். பிறகு தேவகாந்தாரி, கானடா, இவை தவிர அசாதாரணமான ஸாலக பைரவியையும் அழகுபடக் கையாண்டார். 'எந்த பாக்யமு', 'பதவினி', 'கருணாசாகரா' உருப்படிகள் மிக உருக்கமாயிருந்தன. வேககால உருட்டல் புரட்டல்களில் கூடத் தெளிவு கண்டதென்றால் கேட்க வேண்டுமா?"7

மிருதங்க வித்துவான் இராமநாதபுரம் முருகபூபதி ஒரு பேட்டியில் பின்வரும் சுவாரசியமான ஒரு சம்பவம் பற்றிக் கூறியுள்ளார்.

"காரைக்குடி பிரதர்ஸ் கச்சேரியில தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம். வர்ணம் முடிஞ்சு, ரெண்டாவது கிருதி வாசிக்கும் போதே மிருதங்கம் மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சி. பாட்டு வாசிக்கும் போதே பிள்ளை இன்னொரு மிருதங்கத்தை எடுத்து பக்கத்துல நிமிர்த்தி வெச்சு, தபலா மாதிரி தொப்பிக்கு ஒரு வாத்யம், வலந்தலைக்கு ஒரு வாத்யமா வாசிச்சார். காரைக்குடி பிரதர்ஸுக்கு கேட்கக் கேட்க ஒரே ஆனந்தம். பாட்டு முடிஞ்சதும் தீர்மானம் வெச்சு முடிக்கப் போனவரைத் தடுத்து, "பிள்ளைவாள்! அப்படியே ஒரு தனி வாசிக்கணும்"-ன்னார் காரைக்குடி சுப்பராம ஐயர். கணக்கு வழக்குல எல்லாம் நுழையாம, டேக்காவும், குமுக்கியுமா வாசிக்க வாசிக்க கூட்டம் கூத்தாட ஆரம்பிச்சிடுச்சு. அப்படி ஒரு வாசிப்பை ஜென்மத்தில் கேட்டதில்லை"8


மேற்கோள்கள்




No comments:

Post a Comment