பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்

பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் (Palghat T. S. Mani Iyer) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க வித்துவான் ஆவார். இவரை நேயர்கள், 'கலியுக நந்திகேசுவரர்' என்ற செல்லப் பெயரால் அழைத்தனர்.

பிறப்பு: ஜூன் 12, 1912
இறப்பு: மே 30, 1981

ஆரம்பகால வாழ்க்கை

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் திருவில்வாமல வட்டம் பழையனூர் கிராமத்தில் இவர் டி. ஆர். சேஷம் பாகவதர் - அனந்தம்மா தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் இராமசுவாமி. ஆயினும் மணி என்ற தனது செல்லப்பெயரிலேயே அவர் பிரபலமானார். தனது 7 ஆவது வயதில், சாத்தபுரம் சுப்பையரிடம் மிருதங்கம் பயில ஆரம்பித்தார்; தனது தந்தையின் நண்பர் விஸ்வநாத ஐயரிடமும் மிருதங்கம் பயின்றார். 10 வயது நிரம்பியபோது தன் தந்தைக்கும், மற்ற கதாகாலக்ஷேபக் கலைஞர்களுக்கும் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். தனது 15 ஆவது வயதில் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் மாணவர் ஆனார்.

மிருதங்க கலைஞராக

செம்பை வைத்தியநாத பாகவதரின் இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்த பின்னர் இவர் புகழடையத் தொடங்கினார். 1940 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தான ஆஸ்தான வித்வானாக நியமனம் செய்யப்பட்டார்.
இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்:

  • செம்பை வைத்தியநாத பாகவதர்
  • அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
  • ஜி. என். பாலசுப்பிரமணியம்
  • டி. கே. பட்டம்மாள்
  • மதுரை மணி ஐயர்
  • ஆலத்தூர் சகோதரர்கள்
  • எம். எல். வசந்தகுமாரி
  • மகாராஜபுரம் விஸ்வநாதய்யர்
  • செம்மங்குடி சீனிவாச ஐயர்
  • எம். டி. இராமநாதன்
  • நாயனாப் பிள்ளை


செம்மங்குடி சீனிவாச ஐயர் பாலக்காடு மணி ஐயர் பற்றிக் குறிப்பிடுகையில், மணி ஐயர் தனக்கு முதன்முதலாக 1929 ஆம் ஆண்டு மிருதங்கம் வாசித்ததாகவும் அதிலிருந்து சுமார் 35 வருடங்கள் நூற்றுக்கணக்கான கச்சேரிகளில் இருவரும் இணைந்திருந்ததாகவும் மணி ஐயரின் தனித் திறமை அவற்றை நினைவில் நிற்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், பல வித்துவான்கள் மணி ஐயர் தங்களுக்கு மிருதங்கம் வாசிக்க வேண்டும் என விரும்பியதாகவும் அதற்காகச் சிலர் தமது நிகழ்ச்சிகளின் தேதிகளை மணி ஐயர் வரக்கூடியதாக மாற்றி அமைத்தார்கள் என்றும் செம்மங்குடி குறிப்பிட்டுள்ளார்.1

இசை ஆசிரியராக

கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை சித்தூரில் நடத்திய 'ரிஷிவாலி' பள்ளியில் 1979 ஆம் ஆண்டு இசை ஆசிரியராகச் சேர்ந்தார். தனிப்பட்ட முறையிலும் பல மாணவர்கள் இவரிடம் மிருதங்கம் பயின்றனர். இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:

  • உமையாள்புரம் கே. சிவராமன்
  • பாலக்காடு ஆர். ரகு
  • பாலக்காடு சுரேஷ்


சிறப்புகள்

சங்கீத கலாநிதி மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு.

விருதுகள்


  1. ஜனாதிபதி விருது, 1956
  2. சங்கீத கலாநிதி விருது, 1966; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
  3. இசைப்பேரறிஞர் விருது, 1968
  4. பத்ம பூஷன் விருது, 1971


இவற்றையும் பார்க்க:


தமிழ் விக்கிப்பீடியா,
பாலக்காடு மணி ஐயர் வலைப்பக்கம்
Palghat Mani Iyer Centenary
செம்பை வைத்தியநாத பாகவதர் பற்றி பாலக்காடு மணி ஐயர் (ஆடியோ)
Master craftsmen of Palghat Mani Iyer's mridangam

மேற்கோள்கள்


1 Tribute by Semmangudi Srinivasa Iyer



No comments:

Post a Comment