பி. எஸ். நாராயணசுவாமி

பி. எஸ். நாராயணசுவாமி (P. S. Narayanaswamy also written as P. S. Narayanaswami) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞரும், இசை ஆசிரியருமாவார்.

பிறப்பு: பெப்ரவரி 24, 1934

இளவயதில்

கோனேரிராஜபுரம் என்ற ஊரில் மருத்துவர் (டாக்டர்) பி. என். சுப்பிரமணியத்தின் மகனாகப் பிறந்தார். சிறுவயதில் இவருக்கு இசையில் இருந்த ஆர்வத்தைக் கண்ட பெற்றோர் நாதசுவர வித்துவானாகிய திருப்பாம்புரம் சோமசுந்தரம் என்பவரிடம் பயிற்சிக்காகச் சேர்த்துவிட்டனர். இசைப்பயிற்சியில் முன்னேற்றமடைந்து முடிகொண்டான் வெங்கடராம ஐயரிடம் இசை கற்றுக்கொண்டார். பின்னர் 1950களின் ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் குருகுலவாச முறையில் இசை பயின்றார்.

இசை நிகழ்ச்சிகள்

1950களின் இறுதிப்பகுதியில் சென்னையில் குடியேறினார். இவரது குரல் வளம் சிறப்பு மிக்கது. அக்காலத்திலிருந்த எல்லா பெரிய வித்துவான்களின் கச்சேரிகளைக் கேட்டு அவற்றின் அம்சங்களைக் கிரகித்துக்கொண்டு, அதேசமயம் செம்மங்குடி பாணியிலும் இசைக்கச்சேரிகள் செய்தார். அவரது குரல் துரித கதிக்கு ஈடுகொடுத்ததால் இவரது பாணி 'பிருகா'க்களைக் கொண்டதாக அமைந்தது. தாளத்தைத் தனது பிடிக்குள் வைத்துக் கொள்ளக் கூடியவர் என்பதால் நுணுக்கமான பல்லவிகளையும் சாமர்த்தியத்துடன் இலகுவாகக் கையாள அவரால் முடிகிறது. வயலின் பாப்பா வேங்கடராமையா, மிருதங்கம் பாலக்காடு மணி ஐயர் போன்ற சென்ற நூற்றாண்டின் சிறந்த கலைஞர்கள் இவருக்கு பக்கவாத்தியம் வாசித்துள்ளார்கள்.
அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்தில் "வாத்திய விருந்தா" நிகழ்ச்சிகளுக்கு இசைஅமைத்துள்ளார். திருவருட்பாவுக்கு இசை அமைத்து தனது சீடர்களுடன் சென்னை மியூசிக் அகாதமியின் மாநாட்டில் அதனை அரங்கேற்றினார்.

இசை ஆசிரியர்

ஏராளமான மாணவர்கள் இவரிடம் இசை பயில்கின்றனர். வாய்ப்பாட்டு மட்டுமன்றி வயலின், பிற வாத்தியங்கள் பயிலும் மாணவர்களுக்கும் இசை கற்றுக் கொடுக்கிறார்.

விருதுகள்


  • பால கான கலா ரத்தினம் என்னும் பட்டத்தை தனது 12 ஆவது வயதில் பெற்றார்.
  • சங்கீத கலா ஆச்சாரியா, 2000 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதமி வழங்கியது.
  • பத்ம பூஷண், 2003 ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்கியது


மேற்கோள்

The Hindu Friday, June 13, 2003 reproduced in http://www.carnaticcorner.com/articles/psn.html

No comments:

Post a Comment