செம்மங்குடி சீனிவாச ஐயர்

செம்மங்குடி சீனிவாச ஐயர் (Semmangudi Srinivasa Iyer) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். தனது மாணவர்களால் "செம்மங்குடி மாமா" என அன்புடன் அழைக்கப்பட்டவர் அவர்.

பிறந்த தேதி: ஜூலை 25, 1908
இறந்த தேதி: அக்டோபர் 31, 2003


இளமைக்கால வாழ்க்கை

தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோடிக்காவலில் ராதாகிருஷ்ண ஐயருக்கும் தர்மசம்வர்தினி அம்மாளுக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார்.1 நான்கு வயது வரை தனது தாய்மாமா திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயருடன் தங்கியிருந்த இவர், அதன்பிறகு திருவாரூர் மாவட்டம் செம்மங்குடியில் தனது பெற்றோருடன் வாழத்தொடங்கினார். எட்டாவது வயது தொடக்கம் தனது பெரியப்பா மகன் செம்மங்குடி நாராயணசுவாமி ஐயரிடம் இசை கற்கத் தொடங்கினார். தொடர்ந்து திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோரிடம் இசை பயின்றார்.

இசை நிகழ்ச்சிகள்

இவரது அரங்கேற்ற இசை நிகழ்ச்சி 1926 ஆம் ஆண்டு கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோவிலில் நடைபெற்றது. அதிலிருந்து பல இசைக்கச்சேரிகள் செய்து வந்தவர், 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் மாநாட்டில் இடம்பெற்ற கச்சேரியைத் தொடர்ந்து புகழடையத் தொடங்கினார். இவர் எப்போதும் தமது கச்சேரியில் ஸ்வாதித் திருநாள் கிருதி ஒன்று பாடுவார். ஒருசமயம் இவரது கச்சேரியைக் கேட்டதிருவாங்கூர் மஹாராணி சேது பார்வதி பாய் இவரை திருவிதாங்கூருக்கு அழைக்க, இவர் காஞ்சி முனிவரின் ஆசி பெற்று அங்கு சென்றார்.

இசை வளர்ச்சிப் பணிகள்

திருவனந்தபுரத்திலுள்ள சுவாதி திருநாள் இசைக் கல்லூரியின் முதல்வராக 23 ஆண்டுகள் பதவி வகித்தார். அதன்பின்னர் அகில இந்திய வானொலியின் சென்னை வானொலி நிலைய கர்நாடக இசைப்பிரிவு தலைமைத் தயாரிப்பாளராக 1957 தொடக்கம் 1960 வரை பணிபுரிந்தார்.

மாணாக்கர்கள்

மேடைகளில் பாடுவதோடு, மாணவர்களுக்கு இசை கற்பிப்பதிலும் கவனம் செலுத்தினார். ஸ்ரீமதி எம். எஸ். சுப்புலக்ஷ்மி, டி. எம். தியாகராஜன், வயலின் வித்துவான் பேராசிரியர் டி. என். கிருஷ்ணன், பி. எஸ். நாராயணஸ்வாமி, கடையநல்லூர் வெங்கடராமன் ஆகியோர் இவரது சிஷ்யர்கள்.2

சிறப்புகள்

சங்கீத கலாநிதி விருதினைப் பெற்ற இளம் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. தனது 39 ஆவது வயதில் இவர் இவ்விருதினை பெற்றார்.
தனது 92 ஆவது வயது வரை மேடைகளில் பாடினார்.
கருநாடக இசையின் பிதாமகர் என போற்றப்பட்டார்.

கருத்து

தற்கால இசை உலகில் மரபு குறைந்துவிட்டது எனவும் மரபு இல்லாத கலை, களை எடுக்காத வயல் போல என இவர் சொல்லுவாராம்.3

குடும்பம்

மிக இள வயதில் திருமணம் செய்தார். மனைவி பெயர் தாயாரம்மாள். தான் இசைப் பயணங்களில் ஈடுபட்டபோது குடும்பத்தைக் கட்டிக்காத்து தனது தொழில் வாழ்வுக்கு உந்துசக்தியாகத் தன் மனைவி செயல்பட்டதாக இவர் கூறுவார். பிள்ளைகள்: சுவாமிநாதன், கோபாலஸ்வாமி, இராதாகிருஷ்ணன். பெண்கள்: சாந்தா, தர்மா.

விருதுகள்

  • சங்கீத கலாநிதி விருது, 1947; சென்னை மியூசிக் அகாதெமி வழங்கியது 4
  • சங்கீத நாடக அகாதமி விருது, 1953 5
  • பத்ம பூஷண்
  • பத்ம விபூஷண்
  • இசைப்பேரறிஞர், 1969; தமிழ் இசைச் சங்கம் வழங்கியது
  • காளிதாஸ் சம்மன் விருது; இந்தியா மத்திய பிரதேச மாநில அரசு வழங்கியது
  • மதிப்புறு முனைவர் பட்டம், 1979; இந்தியா கேரளா மாநில அரசு வழங்கியது
  • சங்கீத கலாசிகாமணி விருது, 1974 & 1991; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி6


மேற்கோள்கள்

1 Semmangudi Srinivasa Iyer
2 Swathi Puraskaram
3 அன்றொரு நாள்: ஜூலை 25:I
4 Sangita Kalanidhi Recipients
5 SNA Awardees list (Carnatic Music - Vocal)
6 Awardees List

No comments:

Post a Comment