செம்பை வைத்தியநாத பாகவதர்

செம்பை வைத்தியநாத பாகவதர் (Chembai Vaidyanatha Baghavathar) தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞராவார். இவர் செம்பை வைத்தியநாத ஐயர் என்ற பெயராலும் அறியப்பட்டார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இசையுலகில் திகழ்ந்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார்.

பிறப்பு: செப்டெம்பர் 1, 1895
இறப்பு: அக்டோபர் 16, 1974

குடும்ப பின்னணி

தற்போது கேரள மாநிலத்திலுள்ள பாலக்காட்டில் செம்பை என்ற கிராமத்தில் பிறந்தார் . இவர் தமது கிராமத்தின் பெயராலேயே இசையுலகில் பொதுவாக அழைக்கப்பட்டார். அனந்த பாகவதர் மற்றும் பார்வதி அம்மாள் என்ற தம்பதி இவரின் பெற்றோர். இவர் தந்தை, பாட்டனார் மற்றும் முப்பாட்டனார் எல்லோரும் இசைப் பாடகர்களாகத் திகழ்ந்தனர், ஆக, பாகவதருக்கு கருநாடக இசை, குடும்ப பாரம்பரிய கலையாக விளங்கியது. இவரின் முப்பாட்டனார் சுப்பையர் என்பவர் சக்ரதானம் என்ற அரிய தானவகையில் பாடுவதில் தேர்ச்சி பெற்றதால் சக்ரதானம் சுப்பையர் என்றே அழைக்கப்பட்டார்.
3ஆம் வயதில் முறையாக தன் தந்தையிடமிருந்து இசை கற்கத் தொடங்கிய செம்பை, 1904 ஆம் ஆண்டு தனது 8 ஆம் பிராயத்தில் அரங்கேற்ற கச்சேரியை தன் சகோதரன் செம்பை சுப்பிரமணிய பாகவதருடன் ஒட்டப்பள்ளம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் நிகழ்த்தினார்.


இசை நிகழ்ச்சிகள்


இவரும் இவரது சகோதரரும் சேர்ந்து பல இசைக் கச்சேரிகள் செய்தனர். 1914 ஆம் ஆண்டில் இருவருமாக சேர்ந்து செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம் என்ற இசை விழாவை ஆண்டுதோறும் நடக்க ஏற்பாடு செய்தனர். இன்று வரை தொடர்ந்து இந்த உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
external image Chembai.jpg
மிக கம்பீரமாக பாடும் ஆற்றலை பெற்ற பாகவதரின் குரல்வளம் கேட்போரை வியக்க வைக்கும்படி இருந்தது. ஒலிபெருக்கிகள் இல்லாத அக்காலத்தில் அவரது குரல் கணீரென கடைசி வரிசையிலுள்ளவர்களுக்கும் கேட்கும். ஒரு சமயம் நாதசுவரத்தைப் பக்கவாத்தியமாக வைத்து கச்சேரி செய்தார் என்றால் அவரது குரல் எத்தகையது என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

பல சபாக்களிலும் இசை விழாக்களிலும் பாடியதுடன் பிளேட் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட கிராமபோன் இசைத்தட்டுகளிலும் தனது பாடல்களைப் பதிவு செய்து வெளியிட்டார்.

இசைக்கச்சேரியின் போது எந்த இடத்திலும் நிரவல், ஸ்வரப்ரஸ்தரம் செய்யும் விழிப்புணர்வைக் கொண்டிருந்தார்.

மற்ற கலைஞர்களை ஊக்குவித்து உயர்வடைய செய்வதில் செம்பை மிகுந்த ஈடுபாடு கொண்டவர். "ரக்ஷ மாம்", "வாதாபி கணபதிம்", "பாவன குரு" போன்ற பாடல்களை பலமுறை தன் கச்சேரிகளில் பாடி பிரபலப்படுத்தினார். தனது பக்கவாத்தியக்காரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வார். அவர்களின் திறமையை வெளிக்கொணர வாய்ப்புகள் கொடுப்பார்.

தனது சீடர்களையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்துவார். இவருக்கு கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான சீடர்கள் இருந்து வந்துள்ளனர்.
கே. ஜி. ஜெயன் - கே. ஜி. விஜயன் இரட்டையர், கே. ஜே. யேசுதாஸ், டி. வி. கோபாலகிருஷ்ணன், பி. லீலா, வி.வி.சுப்பிரமணியம், போன்றோர் கருநாடக இசையில் இவரின் சீடர்கள்.


குருவாயூரில் செம்பை இசை விழா


ஆண்டுதோறும் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் ஒரு இசை விழா நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கலைஞருக்கு செம்பை புரஸ்கரம் (விருது) வழங்கி வருகிறது. இந்த விருது 50,001 ரூபா பணமுடிப்பு, குருவாயூரப்பன் (locket) அலங்காரப் பேழை, பாராட்டுப் பத்திரம், பொன்னாடை என்பவற்றைக் கொண்டது.

பாடகரும் மிருதங்க கலைஞருமான டி. வி. கோபாலகிருஷ்ணன், வயலின் கலைஞர் எம். எஸ். கோபாலகிருஷ்ணன், பாடகர் பாலமுரளி கிருஷ்ணா, மிருதங்க கலைஞர் மாவேலிக்கர வேலுக்குட்டி நாயர், பாடகர் பரஸ்சல பொன்னம்மாள், கருநாடக இசைக்கலைஞர் கே. ஜி. ஜயன், வீணை கலைஞர் அனந்த பத்மநாபன், கருநாடக இசைக்கலைஞர் திருச்சூர் வி. இராமச்சந்திரன், சக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் ஆகியோர் இந்த விருது பெற்ற கலைஞர்கள்.


விருதுகள்


  1. காயன காந்தர்வ, 1940 "கல்கி" கிருஷ்ணமூர்த்தி வழங்கியது.1
  2. சங்கீத கலாநிதி விருது, 1951 சென்னை மியூசிக் அகாதெமி வழங்கியது2
  3. சங்கீத நாடக அகாதமி விருது, 1958 இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி வழங்கியது3
  4. சங்கீத கலாசிகாமணி விருது, 1964, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி4
  5. பத்ம பூஷண், 1973 இந்திய அரசு வழங்கியது
  6. 1996ஆம் ஆண்டு செம்பையின் நூறாவது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் செப்டம்பர் 28 ஆம் தேதி இந்திய அஞ்சல் துறை ரூ.1 பெறுமதியில் ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.5

இசைக் கச்சேரி


செம்பை வைத்தியநாத பாகவதரின் முழுநேர கச்சேரியைக் கேட்க இங்கே அழுத்தவும். மைசூர் சௌடையா வயலின். பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம். இந்தக் கச்சேரியில் பின்வரும் கீர்த்தனங்களை பாடியுள்ளார்.
  1. ராமா நின்னே - ஹுசேனி
  2. ஜானக்ர ரமணா - சுத்த சீமந்தினி
  3. நாதோபாசன - பேகட
  4. நின்னுவினா கமரி - பூர்விகல்யாணி
  5. சம்போ மகாதேவா - பந்துவராளி
  6. நிதிசால சுகமா - கல்யாணி
  7. மஹிஷாசுர மர்தினி - பிலஹரி
  8. துர்மகசரா - ரஞ்சனி
  9. ந்ரித்யதி மம ஹ்ருதயே - ராகமாலிகை
  10. சரஸ்வதி தயாதாரணி - ?
  11. தில்லானா - ?


மேற்கோள்கள்

1 செம்பை செல்வம் என்ற தலைப்பில் எல். ஆர். விசுவநாத சர்மா எழுதி 1954 ஆம் ஆண்டு அமுத நிலையம் வெளியிட்ட செம்பையின் வாழ்க்கை வரலாற்று நூல்.2 Recipients of Sangita Kalanidhi
3 SNA Awardees list
4 Awardees of Sangeetha Kalasikhamani
5 Stamp World

இவற்றையும் பார்க்க:

Chembai
செம்பை, சௌடையா, பாலக்காடு மணி திரைப்பட காட்சி

No comments:

Post a Comment